00:09
0
பாகிஸ்தானில் கடந்த 24 .09.2013 அன்று 7.7 றிச்டர் அளவுத்திட்டத்தில் ஒரு புவிநடுக்கம் தென்மத்திய பாகிஸ்தான் பகுதியில் ஏற்பட்டிருந்தது. இந்தப் புவிநடுக்கத்தினால் பாகிஸ்தானில் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது ஒருபுறமிருக்க பாகிஸ்தான் கடற்பகுதியில் புதிதாக ஒரு தீவு தோற்றம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் புதிய  தீவின் தோற்றம் பற்றி இக்கட்டுரை ஆய்வு செய்கின்றது.


புவியோடு மற்றும் இடையோட்டிக் மிகமேற்பகுதி ஆகிய இரண்டையும் சேர்ந்த சுமார் 100 கிலோமீற்றர் தடிப்பையுடைய பகுதி கற்கோளம்(Lithosphere) என அழைக்கப்படுகின்றது. இத்தகைய கற்கோளமானது புவியின் உட்பகுதியில் இடம்பெறுகின்ற மேற்காவுகையோட்டச் (Convection Current) செயன்முறைகளினால் தாக்கமடைந்து உடைந்து உருவாகிய கற்கோளத் துண்டுகள் புவித்தகடுகள் அல்லது புவித்தட்டுகள் (Earth's Plates) என அழைக்கப்படுகின்றது. எமது புவியானது ஏழு புவித்தகடுகள் முதன்மை தகடுகள் அல்லது பிரதான தகடுகளையும் பல சிறிய மற்றும் நுண்ணிய தகடுகளையும் கொண்டு காணப்படுகின்றது.
புவியின் உட்பகுதியில் இடம்பெறும் மேற்காவுகை ஓட்டத்தின் காரணமாக தாக்கப்பட்டு அசைவடைதல் தகட்டசைவு எனப்படுகின்றது. தகடுகள் இரண்டு சந்திக்கும் எல்லைகள் தகட்டு எல்லைகள் எனப்படுகின்றது. புவித்தகடுகளின் அசைவானது பிரதானமாக மூன்று வகைகளில் இடம்பெறுகின்றது.

•    நிலைமாறுதல் (Transformation) - தகடுகள் ஒன்றையொன்று பக்கவாட்டாக நகர்தல்.
•    விலகுதல் (Divergent) - தகடுகள் ஒன்றிலிருந்து ஒன்று விலகுததல்.
•    ஒருங்குதல் (Convergent)- தகடுகள் ஒன்றைநோக்கி ஒன்று நோக்கி நகர்தல்


தகடுகளின் இத்தகைய மூன்று வகையான அசiவுகளின்போதும் புவிநடுக்கம் , சுனாமி, எரிமலை போன்ற நிகழ்வுகளுடன்  தீவுகள் , அகழி, பள்ளத்ததாக்கு, மடிப்பு மலை முதலிய தரைத்தோற்ற அம்சங்களும் தோற்றம் பெறுகின்றது.
தகடுகளின் ஒருங்குதலானது மேலும் மூன்றுவகையான உப பிரிவுகளைக் கொண்டுள்ளது. கண்டத்தகடும் கண்டத்தகடும் ஒருங்குதல், சமுத்திரத்தகடும் சமுத்திரத்தகடும் ஒருங்குதல், கண்டத்தகடும் சமுத்திரத் தகடும் ஒருங்குதல் ஆகிய மூன்று வேறுபட்ட ஒருங்குதல் எல்லைகள் காணப்படுகின்றன. தகடுகளின் ஒருங்குதல் எல்லையில் ஒரு தகட்டின் கீழ் இன்னோர் தகடு கீழிறங்குவதனால் அமிழ்தல் வலயங்களை (Subduction Zone) இவை தோற்றுவிக்கின்றன. 


பாகிஸ்தான் புவிநடுக்கத்துடன் தொட்புபட்ட தகட்டசைவானது கண்டத்தகடும் சமுத்திரத்தகடும் ஒருங்கியதன் விளைவால் தோற்றம்பெற்றதாகும். அதாவது பாகிஸ்தான் அமைந்துள்ள ஐரோஆசியன் (யுரேசியன் ) கண்டத்தகடும், அரேபியக் கடலைக் கொண்டுள்ள அரேபியன்  சமுத்திரத்தகடும் ஒருங்கியதன் விளைவாக அடர்த்தியில் கூடிய அரேபியன் சமுத்திரத்தகடு ஐரோ ஆசியன் கண்டத்தகட்டின் கீழே அமிழ்ந்துபோகின்றது. பொதுவாக புவிச்சரிதவியிலாளர்கள் இக்குறிப்பிட்ட பகுதியை மக்ரான் அமிழ்தல் வலயம் என அழைக்கின்றனர். குறிப்பாக இந்த மக்ரான்அமிழ்தல் வலயமானது(Makran subduction zone) தென் பாகிஸ்தானின் இந்து சமுத்திரக் கரை மற்றும் ஈரான் என்பவற்றுக்குச் சமாந்தரமாகக் காணப்படுகின்றது. 
பாகிஸ்தானில் தென்கரையில் கவாடார்(Gwadar)  என்ற பகுதியில் குறிப்பாக பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் இந்தப் புதிய தீவு நிலநடுக்கத்தின் பின்தோற்றம்பெற்றுள்ளது. இத்தீவின் தோற்றத்திற்கு நிலநடுக்கம் இடம்பெறும்போது ஏற்பட்ட சேற்று எரிமலைச் செயற்பாடே காரணமென புவிப்பௌதிகவியலாளாகளால் குறிப்பிடப்படுகின்றது.


புவியோட்டின் கீழேயுள்ள பாறைக்குழம்பானது புவியோட்டின் மேலே வெளியேறுதல் எரிமலை வெடிப்பு எனப்படுகின்றது. எரிமலையானது ஒரு மத்திய எரிமலை வாய் ஒன்றினுடாகவோ அல்லது ஒரு பிளிவினூடான பிளவுக்கக்குகையாகவோ இடம்பெறலாம். குறிப்பாக புவியோட்டின் கீழேயுள்ள பாரைறக்குழம்பு வெளியேறும் நிகழ்வுகள் எரிமலைச்செயற்பாடு எனப்படுகின்றது.

பாகிஸ்தானின் கடல் பகுதியில் காணப்படும் மக்ரான் அமிழ்தல் வலயத்தில் ஏற்பட்ட தகட்டசைவின் அமிழ்தல் செயற்பாட்டினால் கடல்தரைப்பகுதியில் காணப்படும் மணல் மற்றும் நீர் கலந்து தோற்றம்பெற்ற சேற்றுப் பகுதியானது எரிமலைச்செயற்பாட்டுப் பிளவுகளின்வழியே; எரிமலைச் செயற்பாட்டின் உந்துதலினால் மேல்நோக்கி தள்ளப்பட்டு புதிய தீவினை தோற்றம்பெற வைத்துள்ளது என்று குறிப்பிடப்படுகின்றது. 

பொதுவாகச் சேற்று எரிமலைகள் (Mud volcanoes) எனும்போது அவை வழமையாக எரிமலைக்குழம்பிற்குப் பதிலாக சேறுகலந்த பொருட்களை வெளியேற்றி வருபவையாகும். குறிப்பாக சேறு மற்றும் மேற்பரப்பு அடையல்களுடன் சூடான நீரானது கலந்த பொருட்களை வெளியேற்றுபவை இத்தயை சேற்று எரிமலைகள் ஆகும். உலகில்  700 இற்கும் மேற்பட்ட சேற்று எரிமலைகள் காணப்படுவதுடன், இந்தோனேசியாவில் காணப்படும் 10 கிலோமீற்றர் விட்டமும், சுமார் 700 மீற்றர் உயரமும் உடைய சேற்று எரிமலையே உலகில் மிகவும் பெரிய சேற்று எரிமலையாகும்.

சேற்று எரிமலைகள் முன்னரும் பல தடவைகள் மக்ரான் வலயத்தில் காணப்பட்டுள்ளன. குறிப்பாக  1945 ஆம் ஆண்டில் இப்பகுதியில் ஏற்பட்ட புவிநடுமக்கமானது பல சேற்று எரிமலைகளையும், கரையோர தீவுகளையும் இப்பகுதியில் தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை மிக அண்மையில் குறிப்பாக நவம்பர் 2010 இலும் ஒரு தீவினை தோற்றம் பெற வைத்திருந்தது. பொதுவாக இத்தகைய தீவுகள் தற்காலிகமாவை என்பதுடன், கடலின்; அலைகள் மற்றும் புயல்களினால் கழுவப்பட்டு மறைந்துவிடக்கூடியவையாகும். அத்துடன் சிலவேளைகளில் மீண்டுமோர் அமிழ்தல் இடம்பெறும்போதும் மறைந்துவிடக்கூடியவையாகும்.

பாகிஸ்தான் கடற்பகுதியில் தோன்றியுள்ள புதிய தீவுப் பகுதியில் காணப்படும் பருப்பொருட்கள் பொதுவாக கரடுமுரடானதாகவும், பாகுத்தன்மையான பாறையாகவும் மற்றும் மணல் கலந்த சேறாகவும் காணப்படுவதுடன், மெதேன்போன்ற வாயுக்கள் ஆழத்திலிருந்து வெளியேறியும் வருகின்றன. இந்த நிலைமைகள் இத்தீவின் தோற்றத்தில் சேற்று எரிமலைச் செயற்பாடு காணமென்பதனை நிரூபிப்பதாக புவிப்பௌதிகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

தகட்டு எல்லைகளின் விளிம்புகளில் கடலின் மத்தியில் உருவாக்கப்பட்ட இத்தகைய கடலடித்தளமானது பெரும்பாலும் காணப்படுகின்றது. ஆனால் இந்தத் தளமானது கடற்கரையிலிருந்து அருகில் இருப்பதனால்  கடலிற்குமேலே தோன்றி தீவாகக் காட்சியளிக்கின்றது. புதிதாகத் தோற்றம்பெற்ற இந்தத் தீவானது நீள்வட்ட வடிவத்திலும், சுமார் 9 மீற்றர் உயரமுடையதாகவும், 100 மீற்றர் வரையிலான சுற்றளவுடையதாகவும் காணப்படுகின்றது.




0 comments:

Post a Comment