21:09
0


அ.அர்ஜின்,
சட்ட பீடம்,
யாழ் பல்கலைக்கழகம்.
arjunwil@yahoo.com



“சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு தருணமும் எதேச்சாதிகாரத்தையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் சகித்து கொள்ள முடியாத சொற்ப எண்ணிக்கையான தனிநபர்கட்கு ஏற்படுகின்ற அதிவிஷேடமான தைரியத்தின் விளைவாகவே தலைப்பு செய்திகளாகின்றன”.

Whistle Blower அதாவது எச்சரிக்கை ஒலி எழுப்புவோன் என வகைப்படுத்தப்படுவோர் ஓர் படியாக்கற் முறைமையை கொண்ட நிறுவனத்தின் செயற்பாடுகளில் காணப்படும் அல்லது அதிகார படிமுறை நிச்சயிக்கப்பட்டோரால் நிகழ்த்தப்படும் நடத்தைப்பிறழ்வு (misconduct), நேர்மையீனம் (dishonest), சட்டமீறல்கள் (illegality), இலஞ்ச ஊழல் (Bribe and corruption) நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு பகரங்கப்படுத்துபவன் ஆவான். இம்முரண் செயற்பாடுகள் மக்களுக்கு வர்த்தகத்தை வழங்கக்கூடிய அனைத்து விதமான நிர்வாக கட்டவியல் அமைப்புகட்கும் அரச நிறுவனங்கள் தனியார் மற்றும் பொது கம்பனிகள் எந்த ஒரு நாட்டினதும் வர்த்தகவெல்லை நிறுவனங்கள் (இங்கு வர்த்தகம் என்ற பதமானது பொருள் மற்றும் வேவை பரிமாற்றத்தை உணர்த்தி நிற்பதால் அனைத்து நிறுவன வகையறாக்களும் இக்கண்காணிப்பு வளையத்தினுள் அடங்கிவிடும். உதாரணம் கரிசனை மையங்கள் (Charity Organizations)



Whistle Blowers தங்களுடைய செயற்பாடுகளை அக்குறிப்பிட்ட நிறுவனத்தினுள்ளேயோ அல்லது பரந்தளவில் மக்கள் சமூகம் எனும் தளத்திலோ எச்சரிக்கையை வெளிப்படுத்துபவர்.

இதன் முக்கியத்துவம் என்னவெனில் “வெள்ளம் வரும் முன்பே அணை கட்டவேண்டும்” எனும் கோட்பாட்டினடிப்படையில் விளக்ககூடியது. அதாவது இச்செயற்பாடு ஓர் முன்னெச்சரிக்கை அலாரமாக தொழிற்படுவதுடன் ஓர் நிறுவனத்தின் செயற்பாட்டு முகவராண்மைகளின் பிழையான நடத்தையால் அந்நிறுவனம் எதிர் விளைவுகளை நிகழளவில் உருவாக்குவதை தடுப்பதுடன் வேலைத்தளத்தின் தொழில் சார் தரத்தை அதிகரிக்கவும் உற்பத்தியின் வினைத்திறனாற்றலை மேம்படுத்தவும் இச்செயற்பாடு பயனுடையதாகின்றது. ஆனால் Whistle Blowing சுகந்திரமாகவும் சீரானதொடராகவும் இடம் பெற ஓர் வினைத்திறனான கொள்கை கட்டமைப்பு (An effective whistle blowing policy) தேவைப்படுகின்றது. இது குறிப்பிட்ட நாட்டின் சட்டங்கள் மூலமாகவோ அல்லது நடைமுறை விடயங்கள் மூலமாகவோ செயன்முறைப்படுத்தலுக்கு உட்படக்கூடியது.

ஆனால் பெரும்பான்மையான தனிநபர்கள் இந்த whistle Blowers எனும் செயற்பாட்டு பதத்தை தமது வாழ்க்கையில் பிரயோகிப்பதில்லை. காரணம் வஞ்சம் தீர்க்கப்படுவோம் என்பதை விட தொழிலாண்மையின் தொடர்புகளின் வலைப்பின்னல் இழக்கப்படும் எனும் மேலோட்டமான அச்சமே காரணமாக உள்ளது.

ஒப்பீடாக Whistle Blowers ஆக தொழிற்படுபவர்கள் பலதடவைகள் வெளிப்படையாகவே குறிப்பிட்ட நிறுவன கட்டமைப்புக்கள் மூலமாகவோ அல்லது நாட்டின் சட்ட முகவராண்மைகள் மூலமோ பழி தீர்க்கப்படுகின்றனர் என்பது உண்மை.

இவர்கள் வேலைத்தளத்தினுள் வேலைநிறுத்தம், வேலை இடைநிறுத்தம், சம்பளக் குறைப்பு மற்றும் ஏனைய வேலையாட்களிடையே வேறுபாடாக தரக்குறைவாக நடாத்தப்படல் போன்ற அவதிகட்கு ஆளாகின்றனர். இன்று இவர்கட்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்வினை முறைமை Shoot the MESSENGER என அழைக்கப்படுகின்றது.  அதோடு குறிப்பிட்ட எச்சரிக்கை ஒலி எழுப்பியோனை குற்றவியல் நீதிமன்ற நியாதிக்க முறைமை மூலம் குற்றவாளியாக்கல் என்பது இன்று பரவலானது. மேலதிகமாக எதிர்கால வேலை தேடும் படலத்தில் புறக்கணிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. ஏனெனில் தமக்கு எதிராக செயற்படும் எந்த ஒரு ஊழியரையும் நிறுவன முகாமை கட்டமைப்புக்கள் பணியிலமர்த்த விரும்புவதில்லை.

வேறாக அவதுாறு வழக்கு மூலமும் இவர்களை சட்டப்படி குற்றவாளிகளாக இனம்காட்ட முடியும். இது குடியியல் வழக்காக நட்டஈடு கொடுப்பனவிலும், குற்றவியல் வழக்காக இனம் காணப்படின் அது சிறைவாசத்திலும் சென்று முடிவடையும். ஆனாலும் இன்று நீதித்துறையின் போக்கு அவதுாறு பரப்பினும் அது உண்மை என நிரூபிக்கும் பட்சத்தில் முழுப்பாதுகாப்பையும் குற்றம் சாட்டப்பட்டவர் பெறலாம் என்பது சற்றே ஆறுதலளிக்கக்கூடிய விடயம்.

இதில் ஓர் திண்ணமான விடயம் தனிநபர்கள் உலகின் அரசுகள் மேற்கொள்ளும் கபட தானங்களை துணிச்சலாக வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுதான். இதில் அதிகம் பேசப்படுவது அமெரிக்கா பற்றியும் அதோடு Whistle Blowers ஆனயூலியன் அசாஞ்சே மற்றும் எட்வேர்ட் சிநோடன் பற்றியே ஆகும். 

முதலாமவர் அசாஞ்சே, இவரின் விக்கிலீக்ஸ் பற்றி அறியாதவர்கள் இணைய உலகில் இல்லை என்றே கூறலாம். இவர் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஏனைய நாடுகளில் காணப்படும் அமெரிக்காவின் துாதுவராயலங்களுடன் மேற்கொண்ட தொடர்பாடல் விடயங்களை தனது இணையத்தினுாடாக அம்பலப்படுத்தியிருந்தார். அதில் அமெரிக்காவின் இரட்டை முகமும் ஏனைய நாடுகளில் மேற்கொண்ட குறிப்பிட்ட  ஆட்புல அரசுகட்கு எதிரான சதி வேலைகளும் வெளிச்சத்திற்கு வந்தன. எனவே இப்போது அசாஞ்சே இதற்காக பெற்ற பரிகாரம் அவர் மீது தொடரப்பட்டிருக்கும் பாலியல் சேட்டை வழக்காகும்.

இரண்டாமவர் சிநோடன், இவர் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு மையம் சிவிலியன்களின் தொடர்பாடல் வலையமைப்பை ஊடறுத்து மக்களால் பரிமாற்றப்படும் விடயங்களை ஒட்டுக்கேட்டதுடன் அவற்றை பதிவு செய்தும் வைத்திருந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார். இவர் மிக இளநிலை C.I.A (Central intelligence Agency) அதிகாரி என்பது குறிப்பிட கூடியது. தனது மனட்சாட்சி உறுத்தியதன் காரணமாகவே இத்தகவல்களை வெளியிட்டேன் என அவர் ஒப்புக்கொண்டார். இது ஓர் அடிப்படை மனித உரிமையான தனிமைக்கான உரிமையை (Right to Privacy)மீறுவதாக இச்செயல் அமைகின்றது என வாதிடுகின்றார். ஆனால் இவர் தொடர்ந்தும் அமெரிக்காவால் நீதிமுறை விசாரணைகட்காக தேடப்பட்டு வருகின்றார். இது அதிபர் பாரக் ஒபாமாவின் இரண்டாம் பதவிக்காலத்தில் ஓர் அழுத்தக்கறை என அரசியலவதானிகள் கணக்கிடுகின்றனர்.

இவர்களை நோக்கும் போது ஓர் குறிப்பிட்ட நாட்டின் பிரஜை எனும் வகையில் அவர்கள் செய்தது நிச்சயம் ஓர் தேசதுரோக செயலே ஆயினும் முழு மானிட சமுதாயம் என்று பார்க்கும் போது அது ஓர் மனிதாபிமாக செயலே என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஓர் மனித உயிரி முதலில் தனது சமூகமான மானிடத்திற்கு தனது விசுவாசத்தை காட்டிய பின்னரே நாடு எனும் எல்லையினுள் தன்னை கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் பட்டயம் (Universal Declaration of Human Rights) அப்பட்டயம் எண்ணிட்டுள்ள உரிமைகள் மனித குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவர்க்கும் உரியவை என வரையறுக்கின்றதே தவிர குறிப்பிட்ட நாட்டவர்க்கு உரியவை என வரையறுக்கவில்லை. 

நாடு என்ற வகையில் குடிமகனுக்கு உள்ள உரிமைகளை அனுபவிக்க புடிமகனுள்குள்ள கடமைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் மேற்குறிப்பிட்ட உதாரண நபர்களை போன்றோர் குடிமகனுக்குரிய  கடமைகளில் இருந்து விலகி முழு மனித சமுதாயத்திற்காகவும் தம்மை அர்ப்பணிந்திருந்தனர். அரசுகள் என்றும் அமைதிகாக்கும் குடிகளையே விரும்பும் அது என்றும் ஆர்ப்பாட்டமாக தனது திரைமறைவுச் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் குடிகளை விரும்பாது.

மேலாக Whistle Blowing இன்று கீழ்வரும்  விடயங்கட்கு தனது பரப்பெல்லையை விஸ்தரித்துள்ளது.

01. சட்ட மீறுமை-Criminal Offence
02. கடமைப்பாட்டில் இருந்து மீறல்-Failure to comply with legal obligation
03. நீதிறை பிழையாக வழிகாட்டல்- Miscarriage of Justice
04. சுகாதாரக்கேடான செயற்பாடுகள்- Endangering of health safety
05. சுற்றாடலை மாசாக்கும் நிகழ்வுகள்- Damage to the environment
06. நேர்மையற்ற பாகுபாடு- Unfair discrimination

இச்செயற்பாடுகளை மேற்கொண்டமைக்காக பழிவாங்கல் எனும்
தடையிலிருந்து தம்மை பாதுகாக்க Whistle Blowers கீழ்வரும் முறைகளை கைக்கொள்ளலாம்

01.சட்ட ரீதியான பாதுகாப்பை பெறல்
02.அரசின் பாதுகாப்பு முகவராண்மைகளை பயன்படுத்தல்
03. குழு வலையமைப்புக்களை அமைத்தல், பலப்படுத்தல்
04.சர்வதேச தளத்தை தற்பாதுகாப்பிற்காக பயன்படுத்தல்

சில நாடுகள் Whistle Blowers ஐ பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளைக்கூட கொண்டிருக்கின்றன.  உதாரணமாக
01. தென் ஆபிரிக்கா- Protected Disclosure Act
02. ஐக்கிய இராச்சியம்- Public Interest Disclosure Act
03. நோர்வே- Working Environment Act
04. இந்தியா – Protection of Whistle Blowers Act

ஆகியவற்றை பட்டியல் இடமுடிந்த போதும் இலங்கையில் இவ்வாறன ஏற்பாடுகள் ஆச்சரியத்திற்கு அப்பாற்பட்ட மனவேதனைகட்கு என்றும் உட்பட்டவை. ஆனால் சட்டம் உள்ள நாடுகளில் கூட பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே ! இதற்கு உதாரணமாக சட்டம் அமுலிலுள்ள பாரத தேசத்தில் IPL கிரிக்கெட் சூதை வெளிப்படுத்திய பொலிசு கான்ஸ்தோபிள் ஒருவர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டதை காட்ட விரும்புகின்றேன்.

மேற்கூறப்பட்ட விடயங்கள் சமூகத்தில் அபாய செயற்பாடுகட்கான எச்சரிக்கை அலாரத்தையும் அந்த அலாரத்தை உருவாக்குவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதற்கான பரிகாரங்களையும் பட்டியலிடுகின்றன. ஆனால் Whistle Blowers மோதும் கட்டமைப்பை பொறுத்து அவர்கட்காக பதில் விளைவுகள் மோசமாக இருப்பதுடன் கிடைக்கும் பரிகாரங்களும் மறுக்கப்படும் வாய்ப்பு நிகழளவில் அதிகம் என்பதையும் கவனத்திற்கொள்வது சிறப்பானது.


அ.அர்ஜின்,
சட்டபீடம்,
யாழ்பல்கலைக்கழகம்.
arjunwil@yahoo.com

0 comments:

Post a Comment