இந்த ஆண்டுக்கான பௌதிகத்திற்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த தகாகி கஜிதா மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆர்தர் மக்டொனால்ட் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
புதிராக விளங்கி வரும் அணுவின் அடிப்படைத் துகளான நியூதிரினோக்கள் தொடர்பான மர்மமொன்றுக்கு தீர்வு கண்டமைக்காகவே அவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நியூத்திரினோக்களுக்கு திணிவு இருப்பதை தீர்மானிக்க உதவுவதற்காக இந்த இரு பௌதிகவியலாளர்களும் பணியாற்றியுள்ளதாக மேற்படி பரிசு தொடர்பான அறிவிப்பைச் செய்துள்ள ரோயல் சுவீடிஸ் விஞ்ஞான அக்கடமி தெரிவிக்கிறது.
அவர்களது கண்டுபிடிப்பானது பொருட்களின் உள்ளடக்கங்கள் தொடர்பில் எமது புரிந்துணர்வை மாற்றியுள்ளதுடன் பிரபஞ்சம் தொடர்பான எமது கண்ணோட்டத்திற்கு முக்கிய சான்றாகவும் உள்ளது என மேற்படி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் மேற்படி கண்டுபிடிப்பு, துணிக்கைகள் தொடர்பான எண்ணக்கரு மாதிரிகள் மற்றும் பிரபஞ்ச சக்திகள் என்பன சம்பந்தமாக ஏற்கனவேயுள்ள நியம மாதிரிகளுக்கு சவால் விடுப்பனவாக உள்ளன.
சூரிய ஒளிர்வை ஏற்படுத்தும் செயற்கிரமங்கள் போன்ற அணுத் தாக்கங்களின் பெறுபேறாக உருவாக்கப்படும் பாரம் குறைந்த நடுநிலையான துணிக்கைகளாக நியூத்திரினோக்கள் விளங்குகின்றன. புரோத்தோன்களுக்கு அடுத்ததாக பிரபஞ்சத்தில் ஏராளமாகக் காணப்படும் துணிக்கைளாக அவை உள்ளன.
இந்தத் துணிக்கையின் இருப்பு குறித்து 1930 ஆம் ஆண்டில் பரீட்சார்த்தமாக பிரேரிக்கப்பட்ட போதும், அது குறித்து 1950 களில் அணு தாக்கங்களின் போது துணிக்கைகள் விடுவிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே நிரூபிக்கப்பட்டது. இதற்கு முந்திய விதிகள் நியூத்திரினோக்கள் திணிவற்றவை எனத் தெரிவித்தன.
ஆனால் ஜப்பானைச் சேர்ந்த கஜிதா மற்றும் கனடாவைச் சேர்ந்த மக்டொனால்ட் ஆகியோரைத் தலைமையாகக் கொண்ட குழுவினரால் வெவ்வேறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள், அந்தத் துணிக்கைள் திணிவைக் கொண்டுள்ளன என்பதை நிரூபிப்பதாக அமைந்தன. பல நியூத்திரினோக்கள் சூரியனிலிருந்து எதிர்மின் நியூத்திரினோக்களாக காலப்பட்டு முவன் நியூத்திரினோக்களாகவும் ரோ நியூத்திரினோக்களாகவும் மாறுவதை மேற்படி இரு பெளதிகவியலாளர்களும் கண்டறிந்துள்ளனர்.
பௌதிகவியல் விதிகளின் கீழ் நியூத்திரினோக்கள் திணிவைக் கொண்டிருந்தால் மட்டுமே இந்த மாற்றம் சாத்தியமாகும். இந்நிலையில் இந்தப் பெளதிகவியலாளர்களின் கண்டுபிடிப்பு துணிக்கைகள் தொடர்பான பௌதிகவியலுக்கும் எமது பிரபஞ்சம் தொடர்பில் அறிந்து கொள்வதற்கும் முக்கியமானதாக உள்ளதாக நோபல் சபை தெரிவிக்கிறது.
ஆழமான இரகசியங்கள் சம்பந்தமான இந்தக் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தின் தோற்றம், வரலாறு மற்றும் எதிர்காலம் தொடர்பான எமது தற்போதைய புரிந்துணர்வை மாற்றுவதாக உள்ளதாக நோபல் சபையின் நடுவர்கள் குழுவினர் தெரிவிக்கின்றனர். கஜிதாவும் மக்டொனால்ட்டும் 8 மில்லியன் சுவீடன் குரோனர் (950,000 அமெரிக்க டொலர்) பெறுமதியான நோபல் பரிசுத் தொகையை தம்மிடையே பங்கீடு செய்யவுள்ளனர். முதல் நாள் திங்கட்கிழமை மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை சீனாவைச் சேர்ந்த டு யூயூ, அயர்லாந்தை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்கரான வில்லியம் கேம்பல், ஜப்பானைச் சேர்ந்த சதோஷி ஒமுரா அகியோர் வென்றிருந்தனர்.
வில்லியம் கேம்பல் மற்றும் சதோஷி ஒமுரா ஆகியோருக்கு ஒட்டுண்ணியான உருளைப் புழுக்களை முறியடிக்கும் புதிய சிகிச்சை முறைமையை கண்டுபிடித்ததற்காகவும் டு யூயூவுக்கு மலேரியா நோயை முறியடிப்பதற்கான புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்ததற்காகவும் இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை இரசாயனத்துக்கான நோபல் பரிசு தொடர்பிலும் நாளை வியாழக்கிழமை இலக்கியத்துக்கான நோபல் பரிசு தொடர்பிலும் அறிவிக்கப்படவுள்ளது.
சமாதானத்துக்கான நோபல் பரிசு குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. அதேசமயம் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
0 comments:
Post a Comment