முதுகெலும்பிகளில் இதயமானது இதயத்தசை என்னும் இச்சையில்லா இயங்கும் வரித்தசையால் ஆனது. இது இதயத்தில் மட்டுமே காணப்படுகிறது. சராசரி ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 72 அடிப்புகள் ஆகும். ஒரு 66 வயது முதிர்ந்த ஒருவருக்கு அவரது வாழ் நாளில் ஏறக்குறைய 2.5 பில்லியன் தடவை துடிக்கும்.
இதயம் சராசரியாக பெண்களில் 250 – 300 கிராமும் (9 – 11 அவுன்ஸ்) ஆண்களில் 300 – 350 கிராம் (11 – 12 அவுன்ஸ்) திணிவையும் கொண்டுள்ளது.சுற்றோட்டத்தொகுதி உடைய முதுகெலும்பிலிகளில் (முள்ளந்தண்டிலிகள்) இதயம் ஒரு குழாய் வடிவில் அல்லது சிறுபை வடிவில் காணப்படும், இது புரதம், வெல்லம், கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கிய நீர்மத்தைச் செலுத்த உதவுகின்றது.
பூச்சியினங்களில் வழமையாக "முதுகுக் குழாய்" என்று அழைக்கப்படுகின்றது, பூச்சிகளின் "குருதி" ஒட்சிசன் ஏற்றப்படாத நிலையில் காணப்படுகின்றது, ஏனெனில் அவை உடலின் மேற்பரப்பு மூலமாகவே சுவாசத்தை மேற்கொள்கின்றன, எனினும் சில கணுக்காலிகள் போன்ற பூச்சிகள் மற்றும் மெல்லுடலிகள் குருதிநிணநீரைக் (hemolymph) கொண்டுள்ளன, இவற்றுள் செம்பைத் தளமாக உடைய கீமோசையனின் (hemocyanin) ஒட்சிசனைக் காவுகின்றது, இது முதுகெலும்பிகளின் செவ்வணுக்களில் காணப்படும் இரும்பை தளமாக உடைய குருதிவளிக்காவியை ஒத்தது.
இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது பெரிகார்டியல் நீர்மம் என்னும் நீர்மத்தினால் சூழப்பட்டுள்ளது. இந்நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது.
இதயத்தின் அமைப்பு விலங்குகளுக்கு இடையில் வேறுபடுகின்றது, தலைகாலிகளில் இரண்டு "செவுள் இதயமும்" (gill hearts) ஒரு "தொகுதி இதயமும்" அமைந்துள்ளது. முதுகெலும்பிகளில் உடலின் முன் பகுதியில் சமிபாட்டுத்தொகுதிக்குப் பின்புறத்தில் இதயம் அமைந்துள்ளது. எப்பொழுதும் இதய வெளியுறை சுற்றுச்சவ்வினால் சூழப்பட்டிருக்கும்.
0 comments:
Post a Comment