இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவிக்கையில், பரீட்சை நடைபெறுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் சமுகம் அளிக்க வேண்டும்.பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். பகல் நேரம் 12.30 மணிக்கு இரண்டாவது கட்ட பரீட்சை ஆரம்பமாகும்.
வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பிற்பகல் 2.00 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகும். நாளை ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைகளில் பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின் படி 2 இலட்சத்து 92 ஆயிரத்து 706 மாணவர்கள் தோற்றவுள்ளனர். இதேவேளை, புதிய பாடத் திட்டத்தின் படி 2 இலட்சத்து 35 ஆயிரத்து 318 பாடசாலை பரீட்சார்த்திகளும் 45 ஆயிரத்து 242 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.
இந்நிலையில் பழைய பாடத்திட்டத்தின் படி 12 ஆயிரத்து 146 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். நாடு முழுவதும் 2ஆயிரத்து 164 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. விசேட தேவையுடையவர்க ளுக்கென ரத்மலானையிலும் தங்கல்லயிலும் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. பரீட்சை கடமைகளில் 16 ஆயிரத்து 264 பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
உயர்தர பரீட்சைக்குரிய 5 பாடங்களுக்குமாக தமிழ் - சிங்கள மொழிகளில் மொத்தம் 40 இலட்சம் வினாத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறுவதாக அறிவித்துள்ள பகுதிகளில் பரீட்சை மண்டபங்களுக்கு அருகில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் - ஒலிபெருக்கி பாவனை என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. பரீட்சை மண்டபத்துள் பரீட்சை மேற்பார்வையாளர்கள் கூட மாணவர்களுக்கும் பரீட்சார்த்திகளுக்கும் இடையூறு அல்லது அவர்களது கவனம் சிதைந்து விடும் விதத்தில் ஒலி கேட்கும் விதத்தில் பாதணிகள் அணிவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பரீட்சை நடைபெறும் நாட்களில் பாடசாலை வளவுக்குள் பரீட்சையுடன் தொடர்புடையவர்களைத் தவிர வெளியார் எவரும் உள்ளே செல்லக் கூடாது. இம்முறை பொலிஸாரின் கூடுதல் பங்களிப்பு பெறப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment