10:27
0
மிகச்சமீபமாக இலங்கையில் “சட்டம் மற்றும் ஒழுங்கு” ற்கான அமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதோடு இதன் செயலராக முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் நந்த மல்லிகாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவரே விடுதலைப்புலிகளின் சர்வதேவ விவகார பொறுப்பாளரான குமரன் பத்மநாபனை மலேசியாவில் இருந்து இலங்கைக்கு கைது செய்து கொணருவதில் முக்கிய பங்காற்றினார்.

இந்த அமைச்சிற்கான தற்போதைய விளக்கம் “கற்றுக்கொண்ட பாடங்கள்
மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்” விதந்துரைகளை வினைத் திறனாக நடைமுறைப்படுத்துவதாகும். ஆனால் தற்போது வடக்கின் போர் அழிவுச் சின்னங்கள் அவசர அவசரமாக சுத்தமாக்கப்படுவதும், இவ்வாறான அமைச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டு பிரகாசமடைய செய்யப்படுவதும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகட்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் வருமையின் ஆரம்பவேற்பாடுகள் என்பதை மறக்க முடியாது. ஆயினும் இந்த அமைச்சை ஓர் அமுலாக்க பொறிமுறையாக அல்லது ஜனாதிபதியின் இனநல்லிணக்க கரிசனையின் ஓர் அங்கமாக, நவநீதம் பிள்ளையின் முன்பு அரசாங்கத்தால் சமர்ப்பிக்க முடியும் என்பதனையும் காட்ட விரும்புகின்றேன்.


தற்போது உள்ள சிவில் செயற்பாடுகளில் தமிழர் பாரம்பரிய பிரதேசங்களில் இராணுவ தலையீடு தவிர்க்க முடியாததாகியுள்ளது. இந்த வேளையில் சிவில் நிர்வாகத்திற்கு பொறுப்பான பொலிஸையும் சட்டம் மற்றும் ஒழுங்கு எனும் பெயரில் உள்வாங்கி அதன் நிர்வாக இயந்திரத்தை முன்னாள் அராணுவ அதிகாரிகளின் கைகளில் ஒப்படைப்பதானது முழு சிவில் செயற்பாட்டு கட்டமைப்பையும் இராணுவமயமாக்கல் எனும் அபாயத்தை காட்டுகின்றது. இது LLRC அறிக்கையின் மட்டுப்படுத்தப்பட்ட விதந்துரைகளுக்குள்ளும் முரணான ஓர் தடைச் செயற்பாட்டு நிலை என்பது கவனிக்க வேண்டியதொன்றாகும்.

இந்த சட்டம் மற்றும் ஒழுங்கு என்பது சட்ட ஆட்சியில் (Rule of Law) இருந்து சட்டத்தின் ஆட்சிக்கு (Rule by Law) இட்டுச் சென்றுள்ள உதாரணங்கள் பல உண்டு.

இதற்கு சிறந்த உதாரணமாக மியன்மாரின் முன்னாள் இராணுவ சர்வதிகாரி ஜெனரல். நீ வின்( 1962-1988). அவர் நீதித்துறை உட்பட அனைத்து விடயங்களிலும் இராணுவ தலையீட்டை உட்புகுத்தினார். அதாவது சட்டத்தால் ஓர் விடயத்தை கூறி விட்டால் (அதாவது சட்டவாக்கத்துறை முறைப்படி அதை அங்கீகரித்து விட்டால்) அதை நிறைவேற்ற எந்த வழிமுறையையும் கையாள முடியும் என்பதாகும். சுருங்க கூறின் சட்ட ஒழுங்கை நிலை நாட்டல் எனும் பெயரில் அடிமைத்தனத்தை அரங்கேற்றுவது.

இலங்கை போன்ற ஒரு நாட்டின் தற்போதைய உடனடித்தேவை சட்ட ஆட்சியும் நல் அரசாட்சியும் தான். இவற்றை அடைய பின்வரும் மூன்று விடயங்கள் அவசியமானதாகும்.

01.சுயாதீனமான, அழுத்தங்களற்ற காவற்றுறை
02.சுயாதீனமான சட்டமா அதிபர் திணைக்கள நடவடிக்கைகள்
03.பக்கச்சார்பற்ற நீதித்துறை

ஆனால் துரதிஸ்ட வசமாக இதை எழுதிக்கொண்டு இருக்கும் வரையில் மேற்குறிப்பிட்ட வகையில் இயங்கக்கூடிய நிறுவன கட்டமைப்புக்கள் இலங்கையில் இலங்கையில் இல்லை என்றே எண்ணுகின்றேன். வெலிவேரிய போன்ற சம்பவங்கள் இலங்கையின் ஜனநாயகத்தை உரசிப்பார்க்கும் வகையிலான உதாரணங்கள் ஆகும்.

மேலும் அரசின் ஓர் துறை இராணவ மயமாக்கலுக்கு உட்படுதலானது ஏனைய துறைகளும் இராணுவ பிரசன்னத்தை உள்ளீர்ப்பதை ஊக்கப்படுத்தும். உதாரணமாக இன்றும் மியன்மாரின் பிரதம நீதியரசர் ஓர் முன்னாள் இராணுவ அதிகாரியாவார் என்பது இங்கு எதிர்காலக் கண்ணோடு பார்க்கப்பட வேண்டிய விடயம்.

நவநீதம் பிள்ளையின் வருகை என்ற ஒன்றை விடுத்து வட மாகாண சபை தேர்தல் என்பதும் இச்செயற்பாட்டின் விளைவுகளை எதிர்நோக்க போகின்ற ஒன்று. அதிகாரங்கள் எவ்வெவ் வழிகளில் பகரப்படினும் இராணும் என்றும் மத்திய அரசிற்கே உரியது. எனவே இராணுவமயமாக்கல் சிவில் செயற்பாடுகளில் ஆழ வேரூன்றும் போது அது பகரப்பட்ட அதிகாரங்களை அமுல் செய்வதில் பாரிய தடைகளை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது. இவ்வாறான இயல்புகள் அவ்வமைச்சின் எதிர்கால பலன்கள் என்பதை இலங்கையின் 60 வருட கால வரலாறு எனக்கு உதாரணமாக காட்டியுள்ளது.


அ.அர்ஜன்,
சட்டபீடம்,
யாழ்பல்கலைக்கழகம்.
arjunwil@yahoo.com


0 comments:

Post a Comment