விவசாய நடவடிக்கைளில் வெற்றிகரமான விளைவுகள் கிடைப்பதில் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அந்தவகையில் விவசாய நடவடிக்கைகளில் காலநிலைக்காரணிகள், தரைத்தோற்ற காரணிகள், சமூக பொருளாதார காரணிகள் என்பன செல்வாக்குச் செலுத்துகின்றன.
காலநிலைக் காரணிகளாக மழைவீழ்ச்சி, வெப்பநிலை, காற்று, ஈரப்பதன், ஒளி ஆகியனவும் தரைத்தோற்றக் காரணிகள் எனும்போது நிலத்தின் தன்மை (சமவெளி, தொடரலைநிலம், சாய்வு நிலம்), மண்ணின் தன்மை முதலியனவும், பொருளாதாரக் காரணிகள் எனும்போது மூலதனம், மனிதஉழைப்பு, போக்குவரத்து, சந்தை முதலிய காரணிகள் காணப்படுகின்றன.
மழைவீழ்ச்சி
பயிர்ச்செய்கைக்கு மிக இன்றியமையாத காரணியாக மழைவீழ்ச்சி காணப்படுகின்றது. விவசாயத்தில் மழைநீரை நம்பியோ அல்லது தேங்கியுள்ள நீரையோ நம்பியோ பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. மழைவீச்சிழ்ச்சியானது மழைமானியின்மூலம் அளவிடப்படுவதுடன், மில்லிமீட்டர் என்ற அலகில் அளவிடப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் பருவப்பெயர்ச்சி மழை, மேற்காவுகை மழை, சூறாவளிமழை ஆகியவற்றின் மூலம் மழை கிடைக்கின்றது.
இலங்கையில் வடமேல் பருவப்பெயர்ச்சிக்காற்று, தென்மேல் பருவப்பெயர்ச்சிக்காற்று ஆகியவற்றின் மூலம் பருவமழை கிடைக்கின்றது. இலங்கையின் தென்மேல் தாழ்நிலப்பகுதியில் மே – செப்டம்பர் வரையான காலப்பகுதியில் தென்மேல்பருவப்பெயர்ச்சிக் காற்றின் மூலமான மழை கிடைப்பதுடன், இலங்கையின் உலர்வலயப்பகுதிகளுக்கு நவம்பர் – ஜனவரி வரையிலான காலப்பகுதியிலும் வடகீழ்பருவப் பெயர்ச்சிக்காற்றின் மூலமான மழை கிடைக்கின்றது.
அதிக வெப்பம் நிலவும் காலங்களில் நீரானது ஆவியாகி திடீரன மாலைவேளைகளில் இடிமின்னலுடன் தோற்றம்பெறும் மழை மேற்காவுகை மழை அல்லது உகைப்பு மழை எனப்படுகின்றது. பொதுவாக மேற்காவுகை மழையானது இலங்கையின் தென்மேல் தாழ்நிலப்பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சியைக் கொடுப்பதுடன், இடைப்பருவக்காற்றுக் காலங்களான மார்ச், ஏப்ரல் மற்றும் ஒக்டோபர், நவம்பர் ஆகிய காலப்பகுதிகளிலும் மழையைக் கொடுக்கின்றன.
சூறாவளி மழையானது வங்காள விரிகுடாப்பகுதியில் தோற்றம்பெறுகின்ற தாழமுக்க வலயங்களினால் விருத்தி செய்யப்பட்டு உருவாகும் மழையினைக் குறித்து நிற்கின்றது. நவம்பர் மாதங்களில் சூறாவளி மழையானது கிடைப்பதுடன், இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு அதிகமழையைக் கொடுக்கின்றன.
இலங்கையின் மழைவீழ்ச்சிக்கோலத்திற்கேற்ப பருகாலப் பயிர்கள் மேற்கொள்ளப்படுவதுடன், பிரதேசத்திற்கென விசேட பயிர்களும் பயிரிடப்படுகின்றன.
வெப்பநிலை
ஒருபிரதேசத்தின் வளிமண்டத்தில் காணப்படும் வெப்பத்தின் அளவு வெப்பநிலை எனப்படுகின்றது. அயனமண்டலத்தில் இடம்பெறும் விவசாயங்களில் அதிகளவில் வெப்பநிலை செல்வாக்குச் செலுத்தாதபோதிலும், இடைவெப்பவலயத்தில் வெப்பநிலையானது செல்வாக்குச் செலுத்துகின்றது. வெப்பநிலையை அளவிடுவதற்கு வெப்பமானி பயன்படுத்தப்படுவதுடன், பாகை செல்சியஸ் எனும் அலகுகளில் அளவிடப்படுகின்து.
வெப்பநிலையின் அளவானது அதிகமாக இருக்கின்றபோது நீர்ஆவியுயிர்ப்பிற்கு உள்ளாவதுடன், குறைவாக உள்ளபோது தாவரங்களின் வளர்;ச்சியில் பாதிப்பையும், உற்பத்திக்குறைவையும் ஏற்படுத்துகின்றது.
காற்று
அசைகின்ற வளியானது காற்று எனப்படுகின்றது. மழைவீழ்ச்சியின் வடிவத்தை பாதித்தல், முகில்களின் ஒடுங்குதல் போன்றவற்றில் செல்வாக்குச் செலுத்துவதனால் தாவரங்களின் வளர்ச்சியில் முக்கியமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றது. காற்றானது இரண்டுவகையான அளவீடுகளைக் கொண்டுள்ளது. அதாவது காற்றின்வேகம், காற்றின் திசை ஆகினவே அவையாகும். காற்றின்வேகமானது காற்றுவேகமானி என்ற கருவியின்மூலம் அளவிடப்படுவதுடன், காற்றுத்திசைகாட்டிமூலம் காற்றின் திசை அளவிடப்படுகின்றது.
மிதமான காற்றினால் ஒளித்தொகுப்புவீதம் அதிகரித்தல், மகரந்தச் சேர்க்கைக்கு உதவுதல், வித்துக்களின் பரவலுக்கு உதவுதல் வெப்பநிலை மற்றும் ஈரப்பதனைக் கட்டுப்படுத்தல் என சாதகமான விளைவுகளைக் கொண்டுள்ளது. பலமான காற்றினால் தாவரங்கள் முறிந்து விழுதல், பூக்களும் பழங்களும் விழுதல், மண்ணரிப்பிற்கு துணை நிற்றல் என பாதகமான விளைவுகளையும் கொண்டுள்ளது.
ஈரப்பதன்
ஓரலகு வளியில் காணப்படும் நீராவியின் அளவே ஈரப்பதன் எனப்படுகின்றது. தனியீரப்பதன், சாரீரப்பதன் என ஈரப்பதனானது இரண்டாகப் பிரிக்கப்படுகின்றது. ஒரு வளித்துணிக்கையானது கொண்டுள்ள நீராவியின் அளவிற்கும், அத்துணிக்கை கொள்ளக்கூடிய அதிஉச்ச நீராவியின் அளவிற்கும் இடையிலான நூற்று விகிதமே சாரீரப்பதன் எனப்படுகின்றது.
ஈரப்பதனை அளவிடுவதற்கு ஈரமானி பயன்படுத்தப்படுவதுடன், ஈரப்பதனின் அளவீடானது நூற்றுவீதத்தில் குறிப்பிடப்படும். ஈரப்பதனானது பயிர்ச்செய்கையில் பல்வேறு வழிகளில் செல்வாக்குச் செலுத்துகின்றது.
ஈரப்பதன் குறைவடையும் சந்தர்ப்பத்தில் கருக்கட்டல்வீதம் குறைவடைவதுடன், நோய்கள் பீடைகள் பரவலடைதல் , களஞ்சியப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுதல் போன்றவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
சூரியஒளி
புவியில் இடம்பெறும் எல்லா பௌதிக, உயிரியல் செயன்முறைக்கும் தேவையான சக்தியை அளிக்கும் கூலமாக சூரியன் விளங்குகின்றது. தாவரங்களின் ஒளித்தொகுப்பு முதலிய பல்வேறு விடயங்களில் சூரிய ஒளி செல்வாக்குச்செலுத்துகின்றது. சூரிய ஒளியைப் பொறுத்தவரையில் ஒளிச்செறிவு, ஒளியின்தன்மை, ஒளியின் கால அளவு ஆகிய முக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன. ஒளியின் செறிவு எனும்போது ஒளியின் கதிர்வீச்சின் அளவினையும், ஒளியின் தன்மை எனும்போது ஒளிகொண்டுள்ள நிறங்களையும், ஒளிக்காலஅளவு எனும்போது நாளொன்றுக்கு ஒளி கிடைக்கும் மணித்தியாலங்களின் அளவினையும் குறித்து நிற்கின்றது.
சூரிய ஒளியை அளவிடுவதற்கு சூரிய ஒளிர்வுமானி பயன்படுத்தப்படுகின்றது. சூரிய ஒளிக்காலத்தின் அடிப்படையில் தாவரங்களை ஒளிநடுநிலைத் தாவரங்கள், ஒளித்தூண்டற்பேறுடைய தாவரங்கள் என இரண்டாக பிரிக்கப்படும். சூரிய ஒளியானது தாவரங்களின் நடவடிக்கைளில் பல்வேறு வகையில் செல்வாக்குச் செலுத்துகின்றது.
தாவரங்களின் ஒளித்தொகுப்பு, சுவாசித்தல், பூத்தல், வித்துமுளைத்தல், தாவரங்களின் நிறப்பொருள் தயாரித்தல் முதலியவற்றில் செல்வாக்குச் செலுத்துகின்றது.
மண்காரணி
பாறைகளிலிருந்து சிதைவடைந்த நுண்ணிய துகள்களே மண் எனப்படுகின்றது. பயிர்ச்செய்கை ஊடகமாக வேறுபலபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றபோதிலும், 99 சதவீதமான பயிர்கள் மண்ணிலேயே வளர்கின்றன.
பயிர்ச்செய்கையைப் பொறுத்தவரையில் மண்ணினுடைய பௌதிக, இரசாயன இயல்புகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. பௌதிக இயல்புகள் எனும்போது மண்நிறம், மண்சேர்வைகள், மண்துளைவெளி, மண் இழையமைப்பு போன்ற விடயங்களும், இரசாயண இயல்புகளில் குறிப்பாக கார, அமிலத்தன்மைகளும் விளங்குகின்றன.
இலங்கையில் காணப்படும் மண்வகைகளும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்துபனவாக உள்ளன. குறிப்பாக வண்டல் சார்ந்த மண்ணைக் கொண்ட ஆற்றுவடிநிலப்பகுதிகளில் அதிகளவில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ள்படுகின்றது.
Akshayan
0 comments:
Post a Comment