09:56
0

சூரிய ஒளியை மாத்திரம் கொண்டு இயங்கும் சோலர் இம்பல்ஸ் விமானம், தனது வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் நேற்று தரையிறங்கியது.

அபுதாபியிலிருந்து கடந்த மார்ச் 9 ஆம் திகதி உலகைச் சுற்றும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தை தொடங்கிய சோலர் இம்பல்ஸ்-2 விமானம், இதுவரை ஓமன், இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளை கடந்து சென்றுள்ளது. வானிலை காரணமாக ஜப்பானில் 30 நாட்கள் நிறுத்தப்பட்டிருந்த இவ்விமானம், கடந்த ஜூன் 29 ஆம் திகதி நகோயா நகரில் இருந்து பசிபிக் பெருங்கடல் நாடான ஹவாய் தீவை நோக்கி சவாலான பயணத்தை தொடங்கியது.

5 பகல் 5 இரவு இடைவிடாமல் வானில் பறந்து 7900 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டிய விமானம் கடந்த ஜூன் முதலாம் திகதி பயண தூரத்தில் பாதி தூரத்தை வெற்றிகரமாக கடந்தது. பின்னர் 4 நாட்கள் 22 மணி நேரத்திற்குள்ளாகவே, பயண தூரத்தை கடந்து ஜி.எம்.டி. நேரப்படி 16.00 மணியளவில் ஹவாய் தீவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இப்பயணத்தில் சுவிட்சர்லாந்து நாட்டு விமானி ஹெண்ட்ரே போர்ஷ்பெர்க் தனி நபராக விமானத்தை ஓட்டிவந்து சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் 2006 ஆம் ஆண்டு ஸ்டீவ் போஸட் என்ற விமானி தொடர்ந்து 76 மணி நேரம் 45 நிமிடம் விமானத்தை ஓட்டி சாதனை படைத்திருந்தார். தற்போது அவரது சாதனையை போர்ஷ்பெர்க் முறியடித்துள்ளார்.

இதையடுத்து தங்களது டுவிட்டர் வலைதளத்தில் சோலார் இம்பல்ஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது, "நாங்கள் சாதித்துவிட்டோம். நீங்கள் சாதித்துவீட்டீர்கள். உங்களது பேராதரவுக்கு நன்றி" என தெரிவித்துள்ளது.


0 comments:

Post a Comment