சர்வதேச தரம் மிக்க உயர் கல்வியினை மாணவர்களுக்கு வழங்குவதில் 15வது ஆண்டில் கால் பதித்து படிக விழாக்கண்டிருக்கும் மெட்ரோ பொலிடன் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
பாடசாலைகளின் நோக்கம் என்ன என்பதை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று அரசினால் பணிக்கப்பட்டுள்ளது. உரிய நோக்கத்தை நோக்கிய பயணமாக அமைய வேண்டும் என்பதற்காகவே அரசு அவ்வாறு பணித்துள்ளது. அந்த வகையில் மெட்ரோ பொலிடன் கல்லூரியின் நோக்கம் என்ன?
எமது கல்லூரியின் உயரிய நோக்கமாக காணப்படுவது உயர்தரமான அணுகு முறையின் மூலமான கல்வியினை எமது மாணவச் சமூகத்திற்கு வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்தல் என்பதாகும்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தாலும் மாணவர்கள் உயர் கல்வியினை தொடர முடியாமல், உயர் கல்வி என்பது எட்டாக் கனியாகி விடுகிறது. இவ்வாறனவர்களுக்கு உங்களது கல்லூரியில் வாய்ப்பு உண்டா?
நிச்சயமாக எமது கல்வி நிறுவனத்தில் க.பொ.த உயர் தரத்தினை பூர்த்தி செய்த மாணவர்கள் உயர் கல்வியினை தொடர முடியும்.
எவ்வாறெனில் உயர்தரத்தை பூர்த்தி செய்த ஒருவர் உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறியினை 18 மாதங்கள் கற்றதன் பின்னர் நேடியாக பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் ஒரு வருடம் கற்று பட்டதாரியாக முடியும். அதேபோன்று க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் கூட உரிய கல்விப் பாதையினை தெரிவு செய்வதன் மூலம் உயர் கல்வி சாத்தியமாகும்.
எவ்வாறெனில் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்து உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறியினை 18 மாதங்கள் கற்றதன் பின்னர் நேரடியாக பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் ஒரு வருடம் கற்று பட்டதாரியாக முடியும். எனவே பட்டதாரி ஆகுதல் என்பது அவரவர் தெரிவு செய்கின்ற கல்விப் பாதையிலேயே தங்கியிருக்கின்றது. அதேநேரம் தகுதியற்ற டிப்ளோமாவையோ அல்லது உயர் தேசிய டிப்ளோமாவையோ பூர்த்தி செய்வதன் மூலம் பட்டதாரி என்ற இலக்கை நோக்கி பயணிக்க முடியாது.
கற்கை நெறிகள் தகுதியானவையா இல்லையா என்பதை எவ்வாறு இனங் காண்பது?
பட்டப்படிப்பு கற்கை நெறிகளாக இருந்தால் அக்கற்கை நெறிகளை வழங்குகின்ற பல்கலைக்கழகங்கள் எமது நாட்டின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்கலைக்கழகங்களா என்று பார்க்க வேண்டும். டிப்ளோமா மற்றும் உயர் தேசிய டிப்ளோமா ஆகிய கற்கை நெறிகளாயின் அவற்றை வழங்குகின்ற நிறுவனங்கள் மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுள்ளதா என்று நோக்க வேண்டும். மாணவர்கள் பட்டப்படிப்பினை இறுதி நோக்காக கொண்டு டிப்ளோமா மற்றும் உயர் தேசிய டிப்ளோமா ஆகிய கற்கை நெறிகளை கற்பதாக இருப்பின் அவற்றுக்கு மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரத்தை பரிசீலிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அக்கற்கை நெறிகளுக்கு எந்த பல்கலைக் கழகங்கள் இறுதியாண்டிற்கான நுழைவினை வழங்குகின்றது என்றும் அப்பல்கலைக் கழகங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப் பட்டவையா என்பதையும் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.
0 comments:
Post a Comment