08:12
0
வானிலையைக் கவனியுங்கள். இடியுடன் கூடிய மழை பெய்யும்வாய்ப்பு இருந்தால் வெளியில் செல்லும் பயணத்தை ஒத்திவையுங்கள், அல்லது வகைப்படுத்துங்கள். வீடுகளில் பாதுகாப்பாய் இருங்கள்.

பெரும்பாலான மின்னல் பாதிப்புகள் மழைவிட்ட பின்போ, மழை துவங்குவதற்கு முன்போ தான் நிகழ்கின்றன எனவே, மழை விட்டபின் ஒரு அரைமணி நேரமாவது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதுபோலவே மழை வரும் வாய்ப்பு தெரியும் போதே கவனமாய் இருக்க வேண்டும்.

மின்னலை நாம் பார்ப்பதற்கும், தொடரும் இடிச் சத்தத்தைக் கேட்பதற்கும் இடையேயான நேரமே நமக்கும் மின்னல் தாக்கிய இடத்தும் இடையேயான தூரத்தைச் சொல்கிறது. இந்த இடைவெளி ஐந்து வினாடிகளை விடக் குறைவெனில் சுமார் ஒரு மைல் இடைவெளியில் எங்கோ மின்னல் தாக்கியிருக்க வாய்ப்பு உண்டு என கணித்துக் கொள்ளுங்கள்.

 இடி மின்னல் வேளைகளில், உயரமான மரங்கள், கொடிக் கம்பங்கள், கைபேசிக் கோபுரங்கள், பேருந்து நிறுத்தங்கள், உலோகப் பொருட்கள் இருக்கும் இடங்கள் இவற்றின் அருகே நிற்காதீர்கள்.

அதே போலவே வெட்டவெளியிலோ, நீர் நிலைகளிலோ, கடற்கரைகளிலோ, விளையாட்டு மைதானங்களிலோ நிற்காதீர்கள். அந்த இடங்களில் உயரமாய் இருப்பது நீங்கள் தான் என்பதால் நேர் மின்சாரத்தை மேகம் உங்கள் உடலிலிருந்து ஈர்க்கக் கூடும்.

ஒருவேளை வெட்ட வெளியில் இருக்க நேர்ந்தால் தரையில் படுக்கவே படுக்காதீர்கள். குனிந்து வயல் வரப்பில் குந்தவைத்து அமர்வது போல அமருங்கள். தலையைக் குனித்து கால் முட்டியில் வையுங்கள். தரைக்கும் உடலுக்குமான தொடர்பு எவ்வளவு குறைவாய் இருக்கிறதோ அவ்வளவு நல்லது.

சட்டென மயிர்க்கூச்செரிந்தாலோ, அதிர்வு உணரப்பட்டாலோ மின்னல் வெகு அருகில் தாக்கும் வாய்ப்பு உண்டு என உணர்ந்துகொள்ளுங்கள். குழுவாக இருக்காதீர்கள் பிரிந்து தனித்தனியே செல்லுங்கள்.

வீட்டுக்குள்ளே இருந்தால், அந்த நேரத்தில் தொலைபேசியைப் பயன்படுத்தாதீர்கள். தொலைபேசியில் அருகே இருப்பதைத் தவிருங்கள். தொலைக்காட்சி, கணினி உட்பட அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளையும் சற்று ஓய்வில் இருக்க விடுங்கள். மின் இணைப்பிலிருந்து அவற்றை துண்டித்து விடுங்கள். கேபிள் டிவியின் கேபிளையும் கழற்றிவிடுங்கள்.

காரில் சென்று கொண்டிருந்தால் காரின் கண்ணாடிகளை முழுவதுமாக மூடிவிட்டு ஓரமாக நிறுத்திவிட்டு அமைதியாய் இருங்கள். மரங்கள், கம்பங்கள் போன்றவற்றின் அருகே வண்டியை நிறுத்தாமல் கவனமாய் இருங்கள்.

வீடுகளில் அந்த நேரங்களில் சமையல் செய்வது, குளிப்பது போன்ற வேலைகளைச் செய்யாதீர்கள். குறிப்பாக திறந்த சன்னல் அருகே நின்று வானத்தை வெறிக்காதீர்கள்.



0 comments:

Post a Comment