23:25
0

“இன்றைய இலங்கையன் அரசியலை பொறுத்த மட்டில் காணி சம்மந்தமான அதிகார வேட்கை வெறும் நிலத்திற்கான அடிப்படையல்ல. அது குறிப்பாக வடமாகாணத்தை பொறுத்த மட்டில் திட்டமிடப்பட்ட குடித்தொகை விகிதார மாற்றத்திற்கான அடித்தளம் என்பது தான் உண்மை“.

அ.அர்ஜின்
சட்டபீடம்இ
யாழ்பல்கலைக்கழகம்.
arjunwil@yahoo.com

இந்த பந்தியை எழுத ஏற்பட்ட நிர்ப்பந்தத்தின் காரணம் சென்ற வியாழன்
அதாவது 26-09-2013 அன்று இலங்கையின் உயர் நீதிமன்றம் வழங்கிய வழக்கின் தீர்ப்புத்தான். இதில் குறிப்பாக இலங்கை ஒற்றை ஆட்சி நாடு என்கின்ற படியால் காணி அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் மட்டுமே காணப்படும் எனவும் மிக வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மட்டும் அது மாகாண சபையின் ஆளுகைக்கு உட்படும் எனவும் இத்தீர்ப்பு எடுத்தியம்புகின்றது. இத்தீர்ப்பு மூவரங்கிய நீதிபதிகளால் ஏகமனதாக ஆனால் வேறுபட்ட மேற்கோள்களுடன் வழங்கியுள்ளது. அவ்வமர்வு பிரதம நீதியரசர் மொகான் பீரீஸ் மற்றும் நீதியரசர்கள் சிறீ பவன் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோரை உள்ளடக்கி காணப்பட்டது.

நீதியரசர் சிறி பவன் தனது தீர்ப்பில் பதின்மூன்றாம் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளவாறாக தேசிய காணி ஆணைக்குழு மூலம் மாகாணங்கட்கான காணி முறைமைகள் அங்கீகரிக்கப்டும் வரை முழுமையாக இவ்வதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கும் என தெரிவித்ததோடு மேலதிகமாக மத்திய அரசு ஏதேனும் தேவைகட்காக மாகாண சபையிடம் காணிகளை கையளித்திருப்பினும் அதன் உண்மை உரித்து மத்திய அரசிடமே தொடர்ந்து காணப்படும் என தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் குறிப்பிடுகையில் பதின்மூன்றாம் திருத்தம் இரண்டு வகையாக காணிகளை பிரித்துள்ளதோடு அதில் இரண்டாம் நிரலாக ஒதுக்கிய நிரலில் மட்டும் உள்ளடக்கப்பட்டுள்ள விடயமான அரச காணிகள் மத்திய அரசிற்கே என்றும் உரித்துடையவை என தீர்த்தார். இங்கு உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விடயம் அரச காணி என்பதன் வரைவிலக்கணம் அது தனியார் காணி தவிர்ந்த அனைத்து காணிகளும் அரச காணிகள் என வரையறை செய்கின்றது. எனவே தனியார் காணிகள் தனியாரிடமும் அரச காணிகள் முழுவதும் மத்திய அரசிடமும் காணப்பட்டால் மாகாண சபைக்கு எந்த வித காணி அதிகாரமும் கிடையாது என்பது வெளிப்படை.

இன்றைய வடமாகாண சபையின் நோக்கமும் என்றைக்குமே தமிழ் மக்களின் ஏக்கமும் தமது தாயக பகுதிகளில் இன விகிதாசாரம் மாற்றப்பட்டு தாம் ஏதிலிகளாக மாற்றப்பட்டு விடக்கூடாது என்பதேயாகும். இத்தீர்பானது அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கட்கு அரசியற் தளத்தில் ஓர் சட்டவலிதார்ந்த தன்மையை வழங்குவது முகத்தளவிலேயே தெளிவானது.

ஆனாலும் சட்டத்தளத்தை பொறுத்த வரை இது மிகச்சரியான ஓர் முடிவு என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன். ஏனெனில் இலங்கையில் யாப்பே மீயுயர்வாக சட்டம். அதன் உறுப்புரை 33(ஈ) காணிகளை வழங்குவது அல்லது பகிர்ந்தளிப்பது தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதிக்கு மட்டுமே வழங்குகின்றது. அதோடு இலங்கையில் யாப்பை பொருள்கோடல் செய்யவும் இறுதி தீர்மானம் எடுக்கவும் அரசியலமைப்பின் உறுப்புரை 118 உயர்நீதி மன்றிற்கே அதிகாரம் அளிக்கின்றது. எனவே யாப்பில் அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கமைய ஓர் முடிவை நீதிமன்றுகள் எடுப்பதை சட்டவழு என்ற ரீதியில் யாரும் பார்க்க முடியாது.

ஆனால் இத்தீர்பின் பொருள்கோடல் அர்த்தம்  வேற்று முறைமையில் ஆபத்துக்குட்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வழக்கில் சட்டமா அதிபர் சார்பாக தோன்றிய சட்டத்தரணி கொமின் தயாசிறி இன் கூற்றை அப்படியே மீள் பிரசுரம் செய்கின்றேன்.

“This is very significant because it means that every citizen of the country has a right to every inch of land, and it does not belong to the chief minister of the provincial Council. Land is deemed to be in the hands of the president.”

அதாவது இலங்கையின் காணி அதிகாரங்கள் மாகாண முதல்வர்கட்கு என்றுமே உரித்தான மாட்டாது. அது இலங்கை ஜனாதிபதியின் மேல் இலங்கை மக்கள் அனைவருக்கும், எந்த பிரதேசத்திலும் சம உரிமையை கொண்டதாக காணப்பட வேண்டும்.

அவ்வாறெனில் கொழும்பில் இருந்து தமிழர்கள் ஏன் வடகிழக்கிற்கு விரட்டப்பட்டனர். அப்போதும் இதே அரசியலமைப்பின் உறுப்புரை 14 (h) அதாவது அடிப்படை உரிமைகள் எனும் பகுதியினுள் வரும் “இலங்கையினுள் சுகந்திரமாக எங்கும் வாழும் உரிமை” அன்று மறுக்கப்பட்ட போது நீதித்துறை செய்தது என்ன ?

எனவே இன்று மாகாண சபைகளின் முன்னால் உள்ள சவால் சட்டத்தளத்தினுள் நின்று கொண்டு நீதியரசர் குறிப்பிட்ட அந்த வரையறுக்கப்பட்ட நிலைமைகளை எவ்வளவு துாரம் நீட்சியடையச் செய்ய முடியும் என்பதாகும்.  

சட்ட  சகபாடிகட்காக
இவ்வழக்கின் பெயர் Solaimuthu Rasu V Competent Authority of the plantation Ministry. இப்போது உயர்நீதி மன்று வழங்கிய இத்தீர்பானது முன்னைய தீர்ப்பான Jhon Keels வழக்கை புறத்தொதுக்கியுள்ளது. அந்த வழக்கு மாகாண சபைகட்கு காணி அதிகாரங்கள் உண்டு என தீர்த்த வழக்காகும். இப்போதைய வழக்கானது  அடிப்படையில் கண்டி மாகாண மேல் நீதிமன்றில் வழங்காணைக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்காகும். மேல் நீதிமன்று காணி அதிகாரங்கள் மாகாண சபைக்கு கிடையாது என தீர்க்க மேன்முறையீட்டில் மேன்மறையீட்டு நீதிமன்று மாகாண சபைகட்கு காணி அதிகாரம் உண்டு என தீர்த்தது. ஆகால் இறுதி முறையீட்டின் போது உயர்நீதிமன்று காணி அதிகாரங்கள் மாகாண சபைகளிற்கு இல்லை என தீர்த்த போதிலும் இது மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வே எனவே இறுதியான முன் பிணிக்கும் தீர்ப்பாக கருதாது அதற்கான முழு அமர்வு இடம் பெற வேண்டியது அவசியமாகும்.

பிற்குறிப்பு
இவ்வழக்கின் பிரதி கையிற்கு கிட்டாத காரணத்தால் முழுமையாக சட்ட உறுப்புரைகளையும் மேற்கோளிட்ட வழக்குகளையும் அலச இயலவில்லை.

0 comments:

Post a Comment