08:21
0
கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி பல சாதனைகளை படைத்து வரும் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்கள்  வரிசையில், அடிப்படை வசதிகள், பொருளாதாரம் போன்ற பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் பல்கலைக்கு தெரிவாகியுள்ள ஒரு மாணவனது சாதனைதான் இது!
வாழைச்சேனை பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்தில் முத்துவேல் ராசன் என்னும் மாணவன் கலைப் பிரிவில் இரண்டு “ஏ”, ஒரு “சீ” பெறுபேற்றினை பெற்று பாடசாலை சார்பாக முதலிடத்தினையும், மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக 29வது நிலையினைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்கேணி எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மாணவன் தனது ஆரம்பக் கல்வியை தரம் ஒன்று முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரை மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றிருந்தார்.

இவர் கல்வி கற்கும் காலங்களில் தனது தந்தையை இழந்ததோடு பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து தனது கல்வியை இடை நிறுத்தாமல் தொடர்ந்திருக்கிறார்.

இவருடைய தாயார் கடற்கரைக்குச் சென்று கரை வலையில் வரும் மீன்களைத் தெரிந்து கொடுத்து அதன் மூலம் வருகின்ற ஒரு சிறிய வருமானத்தில் தங்களது வாழ்வாதாரத்தை நடாத்தி வந்துள்ளார்.

இந்த காலங்களில் அந்தப் பணத்தை வைத்து வயிற்றுப் பசியைத் தீர்ப்பதா? அல்லது அறிவுப் பசியைத் தீர்ப்பதா? என்ற கேள்விக்கு மத்தியில் இவரது கல்விப் பயணம் தொடர்ந்திருக்கிறது.

அடிப்படை வசதிகளான உணவு, உடை, உறையுள், மின்சாரம் போன்ற விடயங்கள் கூட இல்லாத நிலையில் இவரது கல்வி தொடர்ந்திருக்கின்றது.

இத்தனை கஷ்ரங்களுக்கு மத்தியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சாதாரண தரம் தொடங்கி இருபது வருடங்களின் பின் இந்த மாணவன் மாத்திரம் தான் அனைத்து பாடங்களிலும் சித்தி பெற்று உயர் தரத்திற்கு தகுதியாகியுள்ளார்.

தன்னுடைய உயர்தரக் கற்கைக்காக மிகுந்த பொருளாதார கஷ்டத்துடன் வாழைச்சேனை பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்தில் இணைந்து கொண்டதாகவும், தனது கல்வியை தொடர பாதிரியார் சிறிக்காந்த், ஆசிரியர்களான எ.ஜெயரஞ்சித், க.நிதிஹரன், எஸ்.ஸ்ரீகாந் போன்றவர்களின் உதவியுடன் தான் இந்த நிலைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து தனது பல்கலைக் கழக அனுமதி கிடைத்திருப்பது ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும், மறுபக்கம் தம்முடைய இன்றைய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் எவ்வாறு பூரணப்படுத்துவது என்று கவலையுடன் தெரிவித்தார்.

எவ்வளவோ அபிவிருத்திகளை கடந்து போகின்ற இன்றை சூழலில் இவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் இப்படியாக சாதனை என்பது பிரமிப்பான விடயம் தான் எங்களிடம் வளங்கள் இருக்கின்றன.

ஆனால் களங்கள் சரியாக அமையவில்லை என்பதற்கு இவைகள் தான் எடுத்துக் காட்டுகள். இப்படிப்பட்ட இன்னலுக்கு மத்தியிலும் தன் நோக்கத்தில் தளராது சாதித்த மாணவன் ஒரு சிறந்த முன் உதாரணம்.



0 comments:

Post a Comment