பசளிக் கீரையானது ஆரோக்கிய குணமுள்ள அற்புத உணவாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் அதனை நிலக்கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் கருவியாக மாற்றி அமெரிக்க விஞ்ஞானிகள் புதுமை படைத்துள்ளனர்.
அவர்கள் பசளி இலைகளுக்குள் நுண் குழாய்களை உட்செலுத்தி அவற்றை வெடிபொருட்களைக் கண்டுபிடிக்கும் உணர் கருவியாக மாற்றியுள்ளனர்.
இந்நிலையில் மேற்படி பசளித் தாவரமானது எதிர்காலத்தில் நிலக்கண்ணிவெடிகள் உள்ளடங்கலான வெடிபொருட்களை அகற்றும் கருவியாக நிபுணர்களால் பயன்படுத்தப்படலாம் என மேற்படி கண்டுபிடிப்பை மேற்கொள்வதில் பங்கேற்ற அமெரிக்க மஸாசுஸெட்ஸ் தொழில்நுட்ப நிறுவகத்தைச் சேர்ந்த பொறியியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் நிலக்கண்ணிவெடிகளிலும் ஏனைய வெடிபொருட்களிலும் பயன்படுத்தப்படும் நைத்திரோ அரோமற்றிக்ஸ் என்ற இரசாயனத்தைக் கண்டறியும் வகையில் அந்த பசளிக்கீரையை வடிவமைத்துள்ளனர்.
இந்த இரசாயனம் நிலக்கீழ் நீரில் அவதானிக்கப்படும் பட்சத்தில் பசளித் தாவர இலைகளில் உட்செலுத்தப்பட்டுள்ள நுண் குழாய்கள், அகச்சிவப்பு புகைப்படக்கருவிகள் மூலம் இனங்கண்டறியப்படக்கூடிய ஒளிர்வு சமிக்ஞைகளை வெளிப்படுத்தும்.
மேற்படி புகைப்படக்கருவியை ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியை ஒத்த அளவிலுள்ள சிறிய கணினியில் இணைத்து பயன்படுத்த முடியும். அந்தக் கணினியானது பெறுபேற்றை பயன்பாட்டாளருக்கு இலத்திரனியல் அஞ்சலாக அனுப்பி வைக்கும்.
0 comments:
Post a Comment